சிவசங்கர் பாபாவிற்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, அப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், அவர் இரண்டு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், ஆதாரங்களை தேடும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருவதுடன், சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முதல் வழக்கில் சிறையிலிருந்த பாபாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று(ஜூலை 22) மீண்டும் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி சிவசங்கர் பாபாவை ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக, சிவசங்கர் பாபாவை பார்ப்பதற்காக அவரது பக்தர்கள் இன்று காலை முதல் செங்கல்பட்டு நீதிமன்றம் முன்பாக திரண்டு இருந்தனர். அவரை வெளியே அழைத்து வந்தபோது, அவருடைய பக்தர்கள் ’பாபா, பாபா’ என்றும் ‘சங்கரா சிவ சங்கரா’ என்றும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
சிவசங்கர் பாபாவை காண, தடுப்புகளை உடைத்து கொண்டு பாபாவின் பக்தர்கள் முண்டியடித்து வந்ததால், போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் பாபாவை வேனில் ஏற்றி புழல் சிறைக்கு அழைத்து சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
சிவசங்கர் பாபாவின் இரண்டாவது வழக்கின் நீதிமன்ற காவல் வருகின்ற 27ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,