டி.எஸ்.எஸ்.மணி
ஜனவரி 5 ஆம் தேதி ஜே.என்.யு. உள்ளே புகுந்து நடத்திய வன்முறைக்கு இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. பல்கலைக் கழகத்தில் வன்முறை செய்த ஏபிவிபி குண்டர்களைக் காப்பாற்றுவதற்காகவா இந்து ரக்ஷா தளம்’ என்ற அமைப்பு வன்முறைத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்கிறது? அல்லது பொறுப்பேற்கச் சொல்லி அவர்களுக்கு, ஏதாவது மேலிட உத்தரவா? மதச்சாயத்தோடு திசை திருப்பினால் லாபம் வருமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
இந்தத் தாக்குதலுக்குக் காரணம், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டண உயர்வைக் கட்டிய மாணவர்கள் மீது சில நாட்கள் முன்னால் மாணவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் தான் என முதலில் பரப்பினார்களே? அந்தப் பரப்புரை எடுபடாததால், அடுத்து, மத வேறுபாட்டை விதைக்கலாமென எண்ணி, இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்கிறது என்ற செய்தியைப் பரப்புகிறார்களா?
ஆனால் தாக்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட 20 பேரும், இந்து பெயர்களில் உள்ள 19, 21, 23, 24 வயது மாணவ, மாணவிகளாயிற்றே! அதில் ஒரே ஒரு பெண் 47 வயது என்றால், அவரும் இந்து மதத்தைச் சார்ந்த சுஜித்ரா என்ற ஆசிரியர் ஆயிற்றே? ஏ.பி.வி.பி குண்டர்கள்தான், தாக்கினார்கள் என்று இடது சாரி மாணவர்கள் அமைப்புக்கள் கூறினார்கள். அதற்கு ஆதாரமாக, ஒரு வாட்ஸ் அப் குழு, ‘இடதுகளுக்கு எதிராக ஒற்றுமை’ என்ற பெயரில் உலாவியது என கூறும், இடதுசாரி மாணவர்கள், அதில் இந்தத் தாக்குதலுக்காகத் திட்டமிடப்பட்ட பரிமாற்றங்களை வெளியிட்டனர்.
ஏ.பி.வி.பி. யோ, டெல்லி, சென்னை என ஊடகவியலாளர் சந்திப்புகளில், இடதுசாரி மாணவர் அமைப்புகள் தான் தாக்குதல் நடத்தின என்றனர். பாஜகவினர் ஊடகவியலாளர் கூட்டத்தில், சென்னையிலும் அதையே கூறினர். அவர்களும், தாக்குலுக்கு, இடதுசாரி மாணவர் அமைப்புகளைக் குற்றம் சாட்டின. அப்படியானால், இப்போது, இந்து ரக்ஷா தளம் தாக்குதலுக்குப் பொறுப்பெடுத்த பிறகு, ஏ.பி.வி.பி., பா.ஜ.க. இருவரும் ஊடகவியலாளர்களிடம் கூறியது பச்சைப் பொய் என அம்பலமாகிறதே.
பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில், வெற்றி பெற்ற, தொடர்ந்து பல ஆண்டுகளாக வெற்றி பெறும் இடது சாரி மாணவர் அமைப்பு தலைவர்களையும், முன்னோடிகளையும் இடதுசாரிகளே, எதற்காகத் தாக்க வேண்டும்? ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 23 வயது ஆஷிஸ் கோஷ், ,SFI அமைப்பைச்சேர்ந்தவர். அவர் தாக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளர் AISA என்ற சி.பி.ஐ.( எம்.- எல்) லிபரேஷன், அமைப்பைச் சேர்ந்தவர். இணைச் செயலாளர், சி.பி.ஐ கட்சியின் மாணவர் சங்கமான, AISF ஐச் சேர்ந்தவர். மாணவர் சங்க தலைமைக்கான தேர்தலில், எல்லா பதவிகளிலும், வாக்கு எண்ணிக்கையில், ஏபிவிபி மூன்றாம் இடத்திற்குத்தான் வந்துள்ளது. பலவீனமானவர்களின் பாதை எப்போதும் வன்முறையாக இருக்கும் என்பதே பொது விதி.
காவிகளின் இந்த வன்முறையை, கருத்துக்கள், விவாதங்கள் மூலம் எதிர்கொள்வோம் என்கிறார், பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆஷிஸ். கோஷ்.
தேச விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று் இந்து ரக்ஷா தளம் முத்திரை குத்துகிறார்களே… தேச விரோதம் என்றால் என்ன? தேசம் என்றால் தேச மக்கள்தானே! ஜே.என்.யு., ஜமாலியா, அலிகார் ஆகிய மூன்று பல்கலைக் கழகங்களிலும், தொடர்ந்து அதிருப்தியின் குரல்கள் ஒலித்து வருகின்றன. அதை அடக்க மூன்று பல்கலைக் கழகங்களையும் மூடத் திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று டெல்லிச் செய்திகள் நமக்குக் கூறுகின்றன.
எல்லோரும் ஜே.என்.யு. வன்முறை பற்றி பேசும்போது, பிரதமர் மோடி அமைதியாக சட்டீஸ்கரில் நிலத்திற்குக் கீழே உள்ள தொழில்களை ஒரு ’அ’ எனும் கார்ப்பரேட்டுக்கும், நிலத்திற்கு மேலே உள்ள தொழில்களை இன்னொரு ’அ’ எனும் கார்ப்பரேட்டுக்கும் அமைதியாக, கொடுத்துக் கொண்டிருக்கிறார் என செய்தி சட்டீஸ்கரிலிருந்து, வருகிறது. இதுதான் இன்றைய இந்திய அரசியல்.
�,