ஊக்கத்தொகை வழங்க கோாி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர் சங்கத்தினர், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் நேற்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், கிராம ஊராட்சிகளில் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கடைநிலை ஊழியராகப் பணிபுரிபவர்கள் கொரோனா காலத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து சுகாதார பணியாற்றினார்கள்.
இதைக் கருத்தில்கொண்ட தமிழக அரசு இவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து இவர்களுக்கும் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்கி விட்டது. ஆனால், கிராம ஊராட்சி பணியாளர்கள், மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனே ரூ.15,000 வழங்க வேண்டும்” என இந்தப் போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.
இதேபோல் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவர்கள், “கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் கிராம பஞ்சாயத்து பணியாளர்கள், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து நாங்களும் பணியாற்றினோம். மருத்துவம் மற்றும் சுகாதார துறையினருக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டு விட்டது. அவர்களோடு பணிபுரிந்த எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும்” என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
**-ராஜ்**
.�,”