சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அந்த சட்டத்தில் கையெழுத்திட்ட குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
உடனடியாக சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் ராம் நாத் கோவிந்த். 2 நாள் பயணமாக வந்திருக்கும் ராம் நாத் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். மாணவ மாணவிகளிடையே பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தும் ராம் நாத் கோவிந்த் அதன் பின் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்கிறார். அதன் பின் ஆரோவில் நகரத்துக்கு செல்வதற்கும் ராம்நாத் கோவிந்த் திட்டமிட்டுள்ளார். குடியரசுத் தலைவரின் ஆரோவில் வருகையை ஒட்டி 1,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் அருகே திருநள்ளாறில் இருக்கும் சனீஸ்வரன் கோயிலுக்கும் சென்று வழிபடுகிறார் ராம் நாத் கோவிந்த். கன்னியாகுமரிக்கும் செல்கிறார் குடியரசுத் தலைவர்.
ராம் நாத் கோவிந்த் வருகைக்கு புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்ட குடியரசுத் தலைவரின் கைகளால் பட்டம்பெற மாட்டோம் என்றும் மாணவர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பந்த் நடத்த முன்கூட்டியே திட்டமிட்டப்பட்டது. குடியரசுத் தலைவரின் வருகையால் அந்த பந்த் 27 ஆம் தேதி நடக்க இருக்கிறது.�,