செப்டம்பர் வரை பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக நீடிக்கும்!

Published On:

| By Balaji

ரயில் நிலையங்களில் மேலும் மூன்று மாதங்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி வரை பிளாட்பார டிக்கெட் விலை ரூ.50 ஆக நீடிக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ரயில் நிலையங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பிளாட்பார டிக்கெட் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக ரயில் நிலைய பிளாட்பாரங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைய தொடங்கியதால் ரயில் நிலையங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் சென்னை ரயில்வே கோட்டத்தில் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பார கட்டணம் கடந்த ஆண்டை போல மீண்டும் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு கடந்த 15ஆம்தேதி வரை அமலில் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த முக்கிய ரயில் நிலையங்களில் இன்னும் மூன்று மாதங்களுக்கு, செப்டம்பர் 16ஆம் தேதி வரை பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பிளாட்பார டிக்கெட் விற்பனையை நிறுத்தி, பயணிகளை அனுமதிக்க மறுத்ததால் அதன்மூலம் வரும் ரயில்வேயின் வருமானம் 2020-21 நிதியாண்டில் 94 சதவிகிதம் சரிந்துள்ளதால் இந்தக் கட்டண உயர்வு தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share