வைப்பு தொகை வரி விலக்கு: அவகாசம் வழங்க வங்கிகள் மறுப்பு!

Published On:

| By Balaji

‘வைப்பு தொகை மீதான வட்டி வருவாய்க்கு வரி விலக்குக்கான படிவம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’ என்று வங்கிகளுக்கு மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு வங்கிகள் மறுத்துள்ளன.

வங்கிகளில் வைப்புத் தொகை மீதான வட்டி வருவாய்க்கு வரிப்பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், படிவம் 15-ஜி மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் 15-எச் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்தப் படிவத்தை, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், இந்தப் படிவம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படிவம் 15-ஜி மற்றும் எச் தாக்கல் செய்வது சிரமமானது. எனவே, இதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும்வகையில், “படிவம் 15-ஜி மற்றும் எச் வழங்குவது மிகவும் எளிதானது. படிவத்தை நிரப்பி வங்கி இ-மெயிலில் அனுப்பினால் போதுமானது. ஏப்ரலில் தாக்கல் செய்தால், அவர்களது வைப்புத் தொகை முதிர்வு அடையும் நிலையில், வரிப்பிடித்தம் என்பது இருக்காது.

படிவம் தாக்கல் செய்யத் தவறினால் முதிர்வின்போது வரிப்பிடித்தம் செய்யப்படும். இதைத் தவிர்க்கவே, ஏப்ரலில் படிவம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்” என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share