விலை உயர்வு: லட்சக்கணக்கில் திருடப்படும் வெங்காயம்!

Published On:

| By Balaji

நாட்டில் வெங்காயம் விலை உயர்வைத் தொடர்ந்து, அதனைத் திருடுவது தொடர் கதையாகி வருகிறது.

வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இப்போதைக்கு வெங்காயம் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் வெங்காயம் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கம், சுடஹட்டா பகுதியில் அக்‌ஷய தாஸ் என்பவருக்குச் சொந்தமான கடையிலிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வெங்காயம் திருடு போனது நேற்று தெரியவந்தது. இந்நிலையில் லாரியை கடத்தி ரூ.20 லட்சம் மதிப்பிலான 40 டன் வெங்காயம் கடத்தப்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

நாசிக்கை சேர்ந்த வர்த்தகர் பிரேம்சந்த் சுக்லா, நாசிக் நகரிலிருந்து கோரக்பூர் நோக்கி வெங்காயம் ஏற்றி வந்த லாரி காணாமல் போனதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த சிவபுரி போலீசார் சம்பந்தப்பட்ட லாரியை கண்டுபிடித்துள்ளனர். லாரியை கண்டுபிடித்த போது அதிலிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெங்காயம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வெங்காயத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை சிவபுரி போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபோன்று குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சந்தை ஒன்றில் 250 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், கடையில் இருந்த 50 கிலோ எடையுடைய 5 மூட்டை வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது பதிவாகியுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share