பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் வழங்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கவில்லை எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள மருந்தகங்களில் கால் பால் போன்ற பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை இன்றி வழங்கப்படுவதில்லை. இதனால் சாதாரண காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்படும் மக்கள் இந்த மாத்திரை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அரசுக்கு எதிராக ஜோயல் சுகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வீட்டு உபயோகத்திற்காக வாங்கி வைக்கும் பொருளாகவே பாராசிட்டமால் மாத்திரைகள் உள்ளன.
நோய்த்தொற்று காலத்தில் கொரோனா இல்லாத பிற காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவது இல்லை. எனவே பாராசிட்டமால் மாத்திரைகளைப் பயன்படுத்தி இவர்கள் தீர்வு கண்டு வந்தனர். இந்நிலையில், பாராசிட்டமால் மருத்துவர்கள் பரிந்துரை இன்றி கொடுக்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது. எனவே மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரைகள் எந்த வித கட்டுப்பாடும் இன்றி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த மனு இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரை வழங்கக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதேசமயம் பாராசிட்டமால் மாத்திரையை வாங்க மருத்துவரின் பரிந்துரைகள் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அரசின் விளக்கத்தை அடுத்து எவ்வித கட்டுப்பாடுமின்றி பாராசிட்டமால் மாத்திரை கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்து இவ்வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.
**-கவிபிரியா**�,