பாஜக, சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் மகாராஷ்டிரா ஆளுநரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளன.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 105 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்றன. 145 இடங்கள் பெரும்பான்மைக்கு தேவை என்ற நிலையில், இரு கட்சிகளும் இணைந்து 161 இடங்களைக் கைப்பற்றின. இருப்பினும் சிவசேனாவின் 50: 50 நிபந்தனையால் பாஜக ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
பாஜக ஆட்சியமைக்க சிவசேனா வைக்கும் முக்கியமான நிபந்தனை, ஆதித்யா தாக்கரேவை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் ஆக்க வேண்டும், மீதமுள்ள காலத்தில் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கும் உள் துறை பொறுப்பு சிவசேனாவிடம்தான் இருக்க வேண்டும் என்பதுதான்.
இந்த நிலையில் பாஜக, சிவசேனா என இரு கட்சிகளும் ஆளுநரை தனித்தனியாக சந்தித்துள்ளன. சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திவாகர் ரத்தோர் ராஜ்பவனில் இன்று (அக்டோபர் 28) காலை ஆளுநர் பாகத் சிங் கோஷ்யாரியை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆளுநரை சந்தித்தார். ஆட்சியமைப்பதில் இழுபறி தொடர்ந்து நீடிக்கும் நிலையில், ஆளுநருடனான இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
106 இடங்களைக் கைப்பற்றியிருப்பதால் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என பாஜக ஆளுநரை சந்தித்ததாகவும், பெரும்பான்மை இல்லாததால் பாஜகவை ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது என்று வலியுறுத்தவே சிவசேனா சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இரண்டு கட்சியினர் ஆளுநரை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவே வந்ததாக ராஜ்பவன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.�,