தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதில் அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், ‘தகவல் அறியும் சட்டத்தின் கீழ் புதுவையில் நியமன எம்.எல்.ஏக்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டேன்.
ஆனாலும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் நான் அனுப்பிய கேள்வி மனுவைத் திருப்பி அனுப்பியதுடன் இந்தியில் பதிலளித்தது. எனக்கு அந்த மொழி தெரியாது.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும். எனவே, இந்தியில் வழங்கிய பதிலை ரத்து செய்ய வேண்டும். எனக்குத் தெரிந்த மொழியில் மட்டுமே பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு ஆவணங்களைப் பார்த்த நீதிபதி, தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்தார். மேலும், இதுகுறித்து ஒன்றிய அரசு வருகிற 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் தொடர்பான தகவல்கள், திட்டங்கள் தொடர்பான தகவல்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆங்கிலத்திலேயே கேள்விகளைக் கேட்டாலும் இந்தியில் மட்டுமே பதில் தெரிவிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது.
இந்தி தெரியாதவர்களால் அந்தப் பதிலை புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு அந்தந்த மாநில பிராந்திய மொழிகள், ஆங்கிலத்தில் பதில் தெரிவிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
**-ராஜ்**
.�,