குழாய் நீர் இணைப்பை வழங்குவதற்கான ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் 2021-2022ஆம் ஆண்டுக்கு தமிழகத்துக்கான மானியம் ரூ.3,691 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கிராமப்புற வீடுகள் அனைத்துக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் குழாய் நீர் இணைப்பை வழங்குவதற்காக ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்கிற திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது நாட்டில் உள்ள 19.20 கோடி கிராமப்புற வீடுகளில் 3.23 கோடி வீடுகளிலேயே குழாய் நீர் இணைப்பு இருந்தது. தற்போது திட்டம் தொடங்கிய 22 மாதங்களில் 4.29 கோடி வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 7.52 கோடியாக அதிகரித்துள்ளது.
இதைப்போல தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.26 கோடி கிராமப்புற வீடுகளில் 21.65 லட்சம் வீடுகளில் மட்டுமே திட்டம் தொடங்கியபோது குழாய் நீர் இணைப்பு இருந்தது. தற்போது இந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 40.35 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் தமிழகத்துக்கான மானியம் கடந்த நிதி ஆண்டைவிட இந்த நிதியாண்டுக்கு கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த 2020-2021ஆம் நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.921.99 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 2021-2022ஆம் நிதியாண்டுக்கு ரூ.3,691.21 கோடியாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 86.33 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு கொடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும், 2024ஆம் ஆண்டுக்குள் இதை வழங்க வேண்டுமென்றால் பணிகளின் வேகத்தை 179 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய ஜல்சக்தி துறை கூறியுள்ளது. இது தொடர்பாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
**-ராஜ்**
.�,