ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐயால் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் சிபிஐ காவல் முடிந்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் வரும் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஜாமீன் கேட்டு சிதம்பரம் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜாமீன் அளித்தால் எந்தவிதமான நிபந்தனைகளையும் ஏற்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பானுமதி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வில் இன்று (அக்டோபர் 4) விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பிலிருந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், சிதம்பரம் தரப்பிலிருந்தும் கபில் சிபல், அபிஷேக் சிங்வியும் ஆஜராகினர். அப்போது இந்த வழக்கில் வரும் அக்டோபர் 14ஆம் தேதிக்கு சிபிஐ பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ஏற்கனவே, சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஜாமீன் மனுவின் விசாரணையை உச்ச நீதிமன்றம் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்திருக்கிறது. அதன்பிறகு இரு தரப்பு வாதங்களையும் எடுத்துவைக்கப்பட்டு, பின்னர்தான் தீர்ப்பு வழங்கப்படும். இதனால் அக்டோபர் 17க்கு முன்னதாக ஜாமீன் தீர்ப்பு வந்துவிடும் என்று எதிர்பார்த்த சிதம்பரம் தரப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.�,