சிறப்புக் கட்டுரை: பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசம்

Published On:

| By Balaji

ராஜன் குறை

மகாகவி பாரதி இந்த வரியை, “பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசம்” என்ற வரியை பாடியபோது ஆங்கிலேயே ஆட்சியின் அடக்குமுறை, இந்தியாவில் நிலவிய பஞ்சம், பற்றாக்குறை ஆகிய பல அம்சங்களை கணக்கில்கொண்டு, “தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு” இருந்த தேசத்தை வாழ்விக்க வந்த மகாத்மா காந்தியை வாழ்க என்று வாழ்த்திப் பாடினார்.

இன்று மீண்டும் அப்படியொரு “தாழ்வுற்று, விடுதலை தவறிக்கெட்டு” நிற்கும் நிலையை நோக்கி பாரதம் சென்று கொண்டு இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சில தினங்களுக்குமுன் நாட்டு நிலை குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஒரு முன்னாள் பிரதமர் இவ்வளவு மனம் வெதும்பி எழுதுவது சாதாரணமான விஷயமல்ல. இந்தியா சுதந்திரம் பெற்ற எழுபத்து மூன்று ஆண்டுகளில் இன்றளவு ஒரு மோசமான வீழ்ச்சியை மக்களாட்சியும், பொருளாதாரமும் சந்தித்ததில்லை என்பதே மன்மோகன் சிங் உட்பட பல அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

இதற்கான வரலாற்றுக் காரணங்கள் என்ன என்பதை நாம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

**இந்தியா என்ற தேசத்தின் உருவாக்கம்**

காந்தி இந்தியர்களுக்கு விழிப்புணர்ச்சியும், தேசிய பொது நலனில் அக்கறையும், சேவை மனப்பான்மையையும் உருவாக்கினார். நேரு, படேல், அபுல் கலாம் ஆஸாத், ராஜகோபாலாச்சாரி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் அவர் வழிகாட்டுதலை ஏற்று இணைந்து செயல்பட்டு புதியதொரு தேசத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றார்கள். அவருடன் கடும் கருத்து வேறுபாடுகள் கொண்ட அம்பேத்கர், பெரியார், இடதுசாரிகள், சோஷலிஸ்டுகள் உள்ளிட்ட பலரும் கூட அவர்களுக்கே உரிய விதத்தில் இந்த உருவாக்கத்திற்கு பெரும்பங்காற்றினார்கள் என்றால் மிகையாகாது. மத அடையாளம். சாதி அடையாளம், பிரதேச அடையாளம் ஆகியவற்றை கடந்த ஒரு பொதுவான இந்தியக் குடிமகன் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகள் குறைந்து குடிமக்கள் அனைவருக்கும் சம வாய்ப்பும், உரிமையும் சாத்தியமாகும் சமூகத்தை உருவாக்க விழைந்தார்கள். இது ஒரு மாபெரும் இலட்சியக் கனவு.

மிகப்பெரிய பரப்பளவு, மக்கள்தொகை கொண்ட, பல்வேறு மொழிகள் பேசக்கூடிய, நீண்ட தனித்துவமுடைய வரலாறுகளைக் கொண்ட பிரதேசங்களை ஒருங்கிணைத்து ஒரு தேசத்தை உருவாக்குவது கடினமானது. அதனால் பல்வேறு பிரதேசங்கள் தனிநாடாக விளங்க பல்வேறு தருணங்களில் கோரிக்கைகள் எழுந்தன. பார்ப்பனரல்லாதோர் இயக்கம் தமிழகத்தில் திராவிட நாடு என்ற தனி தென்னிந்திய நாட்டுக்கான கோரிக்கையை எழுப்பியது. காரணம், வட நாட்டு மேலாதிக்கம், பார்ப்பன-பனியா கூட்டணியின் மேலாதிக்கம் போன்ற பல சிக்கல்கள். இதன் மற்றொரு வெளிப்பாடாக இந்தி மொழியை தேசிய மொழியாக அல்லது அரசு அலுவல் மொழியாக அறிவிக்கும் முயற்சி தோன்றியது. இதுவும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இப்படி பல பிரச்சினைகள் இருந்தாலும் புதியதொரு மக்களாட்சி அரசியலின் சாத்தியத்தின் மேல் நம்பிக்கை வைத்து இந்திய தேசம் பிறந்தது.

அரசியல் நிர்ணய சபை அமைத்து அரசியல் நிர்ணய சட்டத்தை எழுதினார்கள். பாபா சாகேப் அம்பேத்கர் சட்ட வரைவு குழுவுக்குத் தலைமை தாங்கி சட்டத்தை வடிவமைத்தார். ஏற்றத்தாழ்வு களை களைந்து முற்போக்கு அம்சங்கள், மதச்சார்பின்மை, சம உரிமை, சம வாய்ப்பு ஆகியவை இந்த சட்டத்தின் பெருமைக்குரிய அம்சங்களாக விளங்கின. முதிர்ச்சியடைந்த சுதந்திரவாத சிந்தனைகளையும், முற்போக்கு பார்வைகளையும் கொண்ட அரசியல் நிர்ணய சட்டம் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை உறுதி செய்ததன் மூலம் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி பரிசோதனையை, தேர்தலின் மூலம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகம் செய்தது உலக வரலாற்றின் முக்கிய முன்னெடுப்பு. இந்த தேசத்தின் இலட்சியங்களையும், அவற்றை அடைய மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகளையும், நிறுவன கட்டமைப்பையும் அரசியல் நிர்ணய சட்டம் அம்பேத்கரின் தலைமையிலான வரைவு குழுவின் அயரா உழைப்பின் மூலம் உருவாக்கித் தந்தது.

**மத அடையாளவாதத்தின் வன்முறைப் பார்வை**

இந்த இந்திய இலட்சியக் கனவுக்கு எதிரான சக்தியாக, பெரியதோர் ஆபத்தாக விளங்கியது மத அடையாளவாத அரசியல். காலனீய அரசுக்கு இஸ்லாமை ஒரு மதமாக அடையாளப்படுத்தியது சுலபமாக இருந்தது. அதற்கு வெளியே இருந்த மக்களையெல்லாம் ஒற்றை மதமாக கருதுவதா இல்லையா எனப் புரியாமல் இருந்தது. பல்வேறு மொழி பேசுபவர்களாகவுள்ள, எண்ணற்ற தெய்வங்களை வெவ்வேறு பிரதேசங்களில் வழிபடுபவர்களாகவும், எண்ணற்ற சாதிகளாகவும் இருந்த மக்கள் தொகுதிகளை ஒற்றை மத அடையாளமாக அது தொகுத்துப் பார்க்க முனைந்தது. அது போன்ற விழைவினைக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் துணையுடன் இந்து மதம் என்று ஒரு மத அடையாளத்தை உருவாக்கியது.

சம்ஸ்கிருத மொழியிலிருந்த இதிகாசங்கள், புராண கதைகள், வேதங்கள், உபநிஷத்துக்கள் ஆகியவற்றை தொகுத்து அச்சிட்டுப் பார்த்தவுடன், அவற்றின் அடிப்படையில் ஓர் இந்து தத்துவம், பண்பாடு ஆகியவற்றை உருவாக்குவது சுலபமாக இருந்தது. பல்வேறு நாட்டார் கதைகளுக்கும் இவற்றுக்கும் இருந்த தொடர்புகளை வலுப்படுத்தி பல்வேறு கிளைகளையும், அடுக்குகளையும், சாதிகளையும் கொண்ட ஒரு மதமாக இந்து மதம் அடையாளம் பெற்று அவ்வண்ணமே காலனீய ஆட்சியில் வழங்கப் படலாயிற்று. இந்துக்களுக்கும் தங்களுடைய தொன்மை, தாங்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பது எல்லாம் மிகவும் ஏற்புடையதாக இருந்தது. குறிப்பாக சம்ஸ்கிருதத்துடன் ஆங்கிலமும் பயின்ற பார்ப்பனர்கள் இந்த இந்து அடையாளத்தை முன்னெடுப்பதில் பெரும் பங்காற்றினர்.

பிரச்சினை என்னவென்றால் இந்து மத உருவாக்கம் பண்பாட்டு தொகுப்பாக, மீட்பாக மட்டும் இருக்கவில்லை என்பதுதான். இந்துக்களுக்கான சட்டங்களாக தர்ம சாஸ்திரங்கள் தொகுக்கப்பட்டன. ஒரு பார்ப்பனர் பார்ப்பனரல்லாத பெண்ணை திருமணம் செய்துகொள்வது சட்டப்படி செல்லாது என்று காலனீய நீதி தீர்ப்பு வழங்கியது. சம்ஸ்கிருத தர்ம சாஸ்திரங்கள் சட்ட அடிப்படைகளாக மாறின. இப்படி சட்டத்தின் வரையறையாக இந்து அடையாளம் மாறியது.

இந்து அடையாளம் தேசிய அளவில் இவ்விதம் உருவானது இஸ்லாமியர்களுக்கு அரசியல் ரீதியான நெருக்கடியாகத் தோன்றியது. அவர்களது நலனைப் பாதுகாக்க முஸ்லிம் லீக் அமைப்பு தோன்றியது. இந்திய தேசிய காங்கிரஸிலும் இஸ்லாமியர்கள் இடம் பெற்றாலும், முஸ்லிம் லீக் என்ற தனித்த கட்சியும் உருவாகி ஆங்கிலேயர்களுடன் முஸ்லிம் நலன்கள் குறித்த பேச்சு வார்த்தையிலிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களுக்கும் பொதுவான கட்சியாகவே இருந்தது.

காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். மத நல்லிணக்கம் மிகுந்த இந்திய பண்பாட்டை அவர் கனவு கண்டார். அரசு மதச்சார்பற்று இருந்தாலும், மனிதர்கள் இறைநம்பிக்கையும், பக்தியும், எளிமையும், அறவுணர்வும், தியாகசீலமும் கொண்டிருக்க வேண்டும் என்பதையே அவர் பண்பாட்டு விழுமியமாகக் கண்டார்.

காந்தியின் விழுமியங்களுக்கு மாறாக மகாராஷ்டிராவில் காலனீயம் வேரூன்றுவதற்கு முன்னால் நிலவிய பார்ப்பன பேஷ்வா ஆட்சியில் ஜாதீயமும், பார்ப்பனீய அரசியல் செல்வாக்கும் உச்சத்திற்கு வந்திருந்தன. இந்திய வரலாற்றில் நேரடியாக பார்ப்பனர்கள் பெரிய நிலப்பரப்பை அரசாண்டதும் பேஷ்வாக்கள் காலத்தில்தான். அவர்கள் ஆட்சி ஆங்கிலேயர்களுடன் ஏற்பட்ட மோதல்களால் முடிவுக்கு வந்த பிறகும் தேஷஸ்ட மற்றும் சித்பவன் பார்ப்பன சமூகங்களிடம் அந்த பேரரசுக் கனவு தொடர்ந்தது எனக்கூறலாம்.

மகாராஷ்டிர பார்ப்பன சமூகங்களிலிருந்து தோன்றியவர்களே இந்தியாவை இந்து அடையாளம் கொண்ட இந்து ராஷ்டிரமாக கற்பனை செய்யத் துவங்கினார்கள். ராஷ்டிரீய சுயம் சேவக் என்ற பெயரிலான ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பையும், இந்து மகாசபா என்ற அமைப்பையும் உருவாக்கினார்கள். இவர்களுக்கு இந்து என்பது முக்கியமாக அரசியல் அடையாளம்தானே தவிர, பக்தியோ, சேவையோ பெரிதல்ல. இஸ்லாமியர்களை பிரதான எதிரிகளாகக் கருதிய இவர்கள் மதக்கலவரங்களின் பின்புலத்தில் இயங்கினார்கள்.

முஸ்லிம்களும் இவர்களைக் கண்டு மதரீதியான அரசியல் அடையாளத்தில் உறுதிப்பட்டார்கள். முஸ்லிம் லீக் தனி நாடு கோரிக்கையை எழுப்பியது. ஒரு சுதந்திர நாட்டுக்குப் பதிலாக இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் உருவாயின. பெரும் கலவரங்கள் மூண்டு இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக்கொள்வதும், கொலைகளும், பொருட்சேதமும் பெருகின. இந்தியாவிலிருந்து ஏராளமான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்தார்கள். அதேபோல பாகிஸ்தான் பகுதியில் வசித்து வந்த இந்துக்களும் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தார்கள். மிகப் பெரிய சோக நாடகம் அரங்கேறியது. அதன் உச்சமாக ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா அமைப்புகளிலிருந்த சாவர்க்கரின் சீடரான நாதுராம் கோட்ஸே காந்தியைச் சுட்டுக் கொன்றார்.

**ஐம்பதாண்டுக் கால காங்கிரஸ் ஆட்சி**

காந்தி கொல்லப்பட்டாலும், ஜவஹர்லால் நேருவின் தலைமையில் காங்கிரஸ் எண்ணற்ற முரண்பாடுகளை வெற்றிகரமாகக் கையாண்டு இந்தியாவை ஒரு வலுவான மக்களாட்சியாக மாற்றியது. வறுமை நிலையிலிருந்து மெள்ள, மெள்ள பொருளாதார வளர்ச்சியைச் சாதித்து பசி, பஞ்சம், பட்டினி போன்றவற்றை பெருமளவு ஒழித்தது. பரவலான தொழில் வளர்ச்சியும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியும் சாத்தியமாயின. இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்த, பிரதேச நலனிலும், பார்ப்பனரல்லாதோர் நலனிலும் அக்கறை கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளும் தேர்தல் பாதையை அரசியல் முரண்களை களைய தேர்வு செய்வது சாத்தியமாக இருந்தது. கம்யூனிஸ்டு கட்சிகளும் தேர்தல் பாதையில் இருந்தன. தலை மட்டத்தில் சில வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தாலும், பெருமளவு அரசியலும், பொருளாதார வளர்ச்சியும் வன்முறையற்ற முறையில் சாத்தியமாகியது.

ஆனால், இந்துத்துவ அரசியல் அமைப்புகள் தங்கள் முஸ்லிம் வெறுப்பையும், மத அடையாள அரசியலையும் தொடர்ந்து பதியன் போட்டு வளர்த்து வந்தன. காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்த தருணத்தில் ராம் ஜென்ம பூமி பிரச்சினையைக் கையிலெடுத்து, மண்டல் கமிஷன் என்ற பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ஆதிக்க சாதிகளிடையே ஏற்படுத்திய கசப்பை பயன்படுத்தி பாரதீய ஜனதா கட்சி மேலெழுந்து வந்தது. அதே நேரம், காங்கிரஸ் இடத்தை பல்வேறு மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் கைப்பற்ற தொடங்கின. தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்று முன்மாதிரி பல்வேறு மாநிலங்களிலும் நிகழத் தொடங்கியது.

**ஆட்சியில் பாரதீய ஜனதா கட்சி**

காங்கிரஸ், பாரதீய ஜனதா, மாநில அரசியல் கட்சிகள் என்ற மூன்று பிரிவுகளில் முதலில் பாரதீய ஜனதா மாநில கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முன்வந்து ஆட்சியமைத்தது. மத்தியில் கூட்டணி ஆட்சி இருந்தாலும், குஜராத்தில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. குஜராத்தி பெரு முதலாளீய சக்திகளின் முழு ஆதரவைப் பெற்றது. எதிர்புறம் காங்கிரஸ் மாநில கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியமைக்க முன்வந்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

காங்கிரஸ், மாநில அரசியல் கட்சிகள் ஆகிய இரண்டு சக்திகளையும் வென்றடக்கி தன்னை நிறுவிக்கொள்ள பாரதீய ஜனதாவிடம் உள்ள ஒரே ஆயுதம் முஸ்லிம் வெறுப்பரசியலும், இந்து பெரும்பான்மை அடையாளவாதமும்தான். இதை செயல்படுத்த குஜராத்தில் வெற்றிகரமாக இந்த அரசியலை முன்னெடுத்த நரேந்திர மோடியை ஒரு பாசிச பிம்பமாக பாஜக முன்வைத்தது. மீண்டும் மத்திய அரசைக் கைப்பற்றியது.

மோடியின் சர்வாதிகாரப் போக்கு பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு குளறுபடிகள் போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் பெருமளவு பாதித்துவிட்டது. பெருமுதலாளி நலன்களுக்காக வங்கிகளின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டதில் வங்கிகள் வாராக் கடன்களால் தள்ளாடுகின்றன. வேகமாகச் சரியும் பொருளாதாரத்தை அரசால் தடுத்து மீட்க முடியவில்லை.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல பாரதீய ஜனதா அரசு பொருளாதார மந்தநிலையை அரசியல் அமைதியின்மை, சமூக வன்முறை ஆகியவற்றால் மேலும் மோசமடையச் செய்கிறது. காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற சிக்கலான பிரச்சினைகளில் தடாலடி முடிவுகளை எடுப்பதன் மூலம் சிக்கல்களைத் தீர்க்க முடியாத சிக்கல்களாக மாற்றுகிறது. குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் என்ற தேவையற்ற சட்டத்தின் மூலம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு உலைவைத்து சர்வதேச கண்டனங்களைப் பெற்றுள்ளது. உள்நாட்டிலோ அடக்க, அடக்க போராட்டங்கள் வெடிக்கின்றன. பதிலுக்குத் தலைநகர் டெல்லியிலே முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரத் தாக்குதல்களை தன் மெத்தனத்தால் அனுமதித்துள்ளது அரசு.

நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவற்றின் சுதந்திரச் செயல்பாட்டில் நேரடியாக தலையிட்டு அச்சுறுத்தல்களைச் செய்கிறது. சிந்தனையாளர்களைக் கொலை செய்வது, மனித உரிமை ஆர்வலர்களை, மாணவர் தலைவர்களை தேச விரோத வழக்கில் கைது செய்வது, உயர்கல்வி நிறுவனங்களின் சுயேச்சையான செயல்பாட்டை பாழடிப்பது என ஒவ்வொரு நாளும் விபரீதமான செயல்களைத் தொடர்ந்து செய்கிறது.

எழுபதாண்டுக் காலம் எவ்வளவோ சவால்களுக்கிடையில் நீரூற்றி வளர்க்கப்பட்ட மக்களாட்சி செடியின் வேர்களில், வெந்நீரூற்றி அழிக்கிறது பாரதீய ஜனதா அரசு. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை… கருகத் திருவுளமோ?” என்ற பாரதியின் சொற்கள்தான் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. மத்திய அரசிற்கான அடுத்த தேர்தல் நடக்க இன்னும் நான்காண்டுகள் உள்ளன. அதுவரை நாடு தாங்குமா என்பதே கேள்வியாக உள்ளது.

**கட்டுரையாளர் குறிப்பு**

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share