சிறப்பு பாதுகாப்பு விலக்கு: காங்கிரஸ் எழுப்பும் கேள்வி!

Published On:

| By Balaji

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நாட்டின் உயரிய எஸ்.பி.ஜி ( Special Protection Group) சிறப்பு பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு அளித்து வந்தனர். பிரதமர் மோடியும் இந்த பாதுகாப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் இசட் பிளஸ் என்ற பாதுகாப்பு சோனியா குடும்பத்தினருக்கு வழங்கப்படும். மத்திய பாதுகாப்பு படையினர் இதற்கான பொறுப்புகளை ஏற்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உளவுத்துறை மற்றும் ‘ரா’ உளவு பிரிவு அளிக்கும் தகவல்களை கொண்டே, மத்திய உள்துறை அமைச்சகம், விஐபிகளுக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பதை தீர்மானித்து வரும். அவர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே, சோனியா காந்தி குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் எஸ்பிஜி பாதுகாப்பில் இருப்பவர்கள் பாதுகாப்பு குறித்து விரிவான மறு ஆய்வு செய்யப்படும். அந்த வகையில் இப்போது சோனியா காந்தி குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதில், அவர்களுக்குப் பெரிய அளவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், எஸ்பிஜிக்குப் பதிலாக மற்ற படையினர் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று(நவம்பர் 8) மாலை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல ஆண்டுகளாக என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாக்க அயராது உழைத்த எனது எஸ்.பி.ஜி சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி. உங்கள் அர்ப்பணிப்பு, உங்கள் தொடர்ச்சியான ஆதரவு, பாசம் மற்றும் கற்றல் நிறைந்த பயணத்திற்கு நன்றி. இது ஒரு பாக்கியம். ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

**வலுக்கும் கேள்விகள்**

கடந்த பத்து ஆண்டுகளாக வாஜ்பாய் நோயில் இருந்தபோதிலும் கூட அவருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை. ஆனால், அடிக்கடி பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக செல்லும் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பியுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சொந்த மெய்க்காப்பாளர்களால் பதவியில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட பின்னர் எஸ்.பி.ஜி உருவாக்கப்பட்டது. இந்திரா காந்தியின் படுகொலையே சிறப்பு பாதுகாப்பு குழு அமைக்க நாட்டில் வழிவகுத்தது. பின்னர், கடந்த 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அனைத்து முன்னாள் பிரதமர்கள், பிரதமர் குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில், சோனியா காந்தியின் குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பை திரும்பப் பெற்றது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனியாகாந்தி குடும்பத்தினரிடமிருந்து எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற அரசு எடுத்த முடிவுக்கு எதிராக உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால், “எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெறுவதன் மூலம், மோடி அரசு இரண்டு முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையில் சமரசம் செய்துள்ளது. எஸ்பிஜி பாதுகாப்பை நீக்குவது, பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனிப்பட்ட பழிவாங்கும் அரசியலை செய்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. வி.பி.சிங் அரசாங்கமும் இதைச் செய்தபோது இந்தியா ஒரு விலை கொடுத்தது” எனக் கூறினார்.

மேலும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இது குறித்த செய்திகள் வந்ததாகவும், சில நாட்கள் முன்பு மன்மோகன் சிங் உட்பட காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதினர் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இக்கடிதம் குறித்து காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த போது, “இந்த கடிதம் 5.11.2019 அன்று அமைச்சரவை செயலாளருக்கு எழுதப்பட்டது. ஆனால், எந்தப் பதிலும் இல்லை. அமைச்சரவை செயலாளருக்கு முன்னாள் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். குறைந்தபட்சம் ஒரு பதிலையாவது எதிர்பார்க்கிறோம். இப்போது, அவர்கள் ஒருதலைப்பட்சமாக சோனியா காந்தி குடும்பத்தின் எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளனர். இது அரசாங்கத்தின் பழிவாங்கும் அரசியலைக் காட்டுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share