தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் தமிழ்நாடு காவல் துறையில் 8,427 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், சிறைத் துறையில் 208 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை 191 அமைப்பாளர் பணியிடங்கள் என 8,826 இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 6ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். ஆகஸ்ட் 25ஆம் தேதி இப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்று செப்டம்பர் 26ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடல் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு பெற வேண்டியது அவசியம். அவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வான உடல் திறன் (physical efficiency test) தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
உடல்தகுதி தேர்வில் தேர்வு பெற ஆண்கள் 1,500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் கடக்க வேண்டும். பெண்கள் மற்றும் திருநங்கைகள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 விநாடிகளில் ஓடி முடிக்க வேண்டும். உடல் திறன் போட்டியில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் ஆண்களும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் பெண்களும் கலந்துகொண்டு அவர்களுக்குரிய போட்டிகளில் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நட்சத்திர திறன் பெற வேண்டும்.
இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட உடற்தகுதி மற்றும் உடல் திறன் போட்டிகளில் கலந்து கொண்டு தேர்வு பெறுவதற்காக, சென்னையில் உள்ள மனிதநேய கட்டணமில்லா ஐஏஎஸ் கல்வியகம் சிறந்த பயிற்சியாளரைக்கொண்டு இலவசமாக வழங்க உள்ளது. இதுகுறித்து மனிதநேய மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆகியவற்றுடன் அக்டோபர் 10 முதல் மனிதநேயம் பயிற்சி மையத்தில் நேரிலோ அல்லது www.mntfree.ias.com என்ற இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.�,”