r
நெல்லை சாஃப்டர் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டடத்தில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் கட்டடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. பல மாவட்டங்களில் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நெல்லை பள்ளி விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உள்ளடக்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியை உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சாஃப்டர் பள்ளியின் தலைமை ஆசிரியை ஞானச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ், அருள் டைட்டஸ், சுதாகர் டேவிட் ஆகிய நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து பள்ளியின் நிர்வாக மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,