சென்னை பாண்டிபஜாரில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை பாண்டிபஜார் தியாகராய சாலையில் மூன்று அடுக்குகளை கொண்ட ரெயின்போ ஆர்கேட் என்ற வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த வணிக வளாக கட்டிடத்தில் நகை கடை, ஜவுளி கடை மற்றும் வங்கி கிளை போன்றவை இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் வணிக வளாகத்திலுள்ள ஜவுளிக்கடையில் திடீரென்று, தீ விபத்து ஏற்பட்டது. இங்கே ஏற்பட்ட தீ மளமளவென அடுத்த இரண்டு தளத்திற்கும் பரவியதால், அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது.
இதுகுறித்து கிடைத்த தகவலின்படி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ ஏற்பட்டவுடனே அங்கேயிருந்த 50க்கும் மேற்பட்டோர் மொட்டைமாடிக்கு சென்று தங்களை தற்காத்துக் கொண்டனர். அதற்குள்ளாக தீயணைப்பு படையினர் 50 பேரையும் எந்தவித காயமும் இன்றி பத்திரமாக மீட்டனர். கிட்டதட்ட ஒருமணி நேர போராட்டத்திற்குபின்,தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
விபத்து நடந்தபோது வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த தீ விபத்து குறித்து மாம்பலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை இணை இயக்குநர் பிரியா கூறுகையில், “தீ விபத்து குறித்து எங்களது கட்டுப்பாட்டு அறைக்கு 12 மணியளவில் தகவல் வந்தது. உடனடியாக தியாகராய நகர், தேனாம்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து எங்களது 5 வாகனங்களை கொண்டு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். முதல் தளத்தில் உள்ள துணிக்கடையில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேத விபரங்கள் இனிமேல்தான் தெரியவரும். மின்கசிவால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை” எனக் கூறினார்.
**-வினிதா**