நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. கடந்த 1ஆம் தேதியிலிருந்து வேட்புமனு பரிசீலனைகள் நடந்துவந்தன. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நாங்குநேரி தொகுதியில் மொத்தமாக 23 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. நாங்குநேரி தொகுதியில் அதிமுகவின் நாராயணனும், காங்கிரஸின் ரூபி மனோகரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணனும் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு அதிமுகவின் முத்தமிழ்ச்செல்வனும், திமுகவின் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சியின் கந்தசாமியும் களத்தில் உள்ளனர். காமராஜர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரனும், நாம் தமிழர் கட்சியின் பிரவீனா மதியழகனும் போட்டியில் இருக்கிறார்கள். இங்கு களத்தில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 9.
வழக்கமாக இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டுவர். கடந்த காலங்களை விட, தற்போது நடைபெறும் மூன்று தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் குறைந்த அளவிலான வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், முதல்வரின் பிரச்சாரப் பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 12,13,16 தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும், 14,15,18 தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.�,