இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம்: 22 பேர் உயிரிழப்பு!

Published On:

| By Balaji

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்று மாலை 4.32 மணிக்குச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவான நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜராத், சித்ரால், மலாக்கண்ட், முல்தான், ஷாங்க்லா, ஸ்வாட், சாஹிவால், ரஹீம் யார்கான் மற்றும் மிர்பூர் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மிர்பூர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என பாகிஸ்தான் தகவல்தொடர்பு அமைச்சர் முஸ்தப் மின்ஹாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், “நிலநடுக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருந்துகள், உணவுகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டனர். சிறந்த சுகாதார வசதிகளை மிர்பூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது” என்றார். ஜீலம், மிர்பூர் பகுதிகளில் அதிகளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் தேசிய பேரிடர் மீட்பு படை கூறியுள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வாகனங்கள் சேதமடையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதே போல இந்தியாவிலும் டெல்லி உட்பட பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆனால், பாதிப்புகள் குறித்து உடனடி விவரங்கள் கிடைக்கவில்லை.

ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியை மையப்படுத்தியே இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இந்தப் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜே.எல்.கவுதம் கூறியுள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share