உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு: ஸ்டாலின் அறிவிப்பு!

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் விருப்ப மனு 14ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் இன்று (நவம்பர் 11) நடைபெற்றது. பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. முடிவில் வரும் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்துவது எனவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு முன்னரே வேட்பாளர் விருப்ப மனு பெறுவது தொடர்பாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எது எப்படியிருப்பினும், உள்ளாட்சித் தேர்தலை திமுக மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதனை சந்திக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அந்தந்த மாவட்டக் கழக அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டியிடுவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும்” எனவும் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே துவங்கிவிட்டன. தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், ‘உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பெறப்படும்’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். ஆளுங்கட்சியே தனது தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதால் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் ஸ்டாலினும் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

**திமுக விருப்ப மனு கட்டண விபரங்கள்**

மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் – ரூ.50,000

மாமன்ற உறுப்பினர் – ரூ.10,000

நகர்மன்றத் தலைவர் – ரூ.25,000

நகர்மன்ற உறுப்பினர் -ரூ.5000

பேரூராட்சித் தலைவர் – ரூ.10,000

பேரூராட்சி மன்ற உறுப்பினர் – ரூ.2500

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் – ரூ.10,000

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் – ரூ.5000

இதில் ஆதிதிராவிடர் , பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவோர் கட்டணத் தொகையில் பாதி மட்டும் செலுத்த வேண்டும். விருப்பமான படிவத்தை 10 ரூபாய் செலுத்தி மாவட்ட தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share