கோவையில் வீடு இடிந்து 2 பேர் பலி: விடிய விடிய மீட்புப் பணி!

Published On:

| By Balaji

கோவையில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விடிய விடிய மீட்புப் பணி நடைபெற்ற நிலையில் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் பெய்த கனமழையின் காரணமாகச் செட்டி வீதியில் உள்ள வனஜா என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் நேற்று இரவு இடிந்துள்ளது. இதனால் அந்த கட்டிடத்தின் அருகிலிருந்த ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு குழுவினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். முதல்கட்டமாக கட்டட இடிபாடுகளில் 8 பேர் சிக்கி இருப்பது தெரியவந்தது.

இதில் ஸ்வேதா (27) என்ற பெண்ணும், கோபால்சாமி (70) என்ற முதியவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். விடிய விடிய மீட்புப் பணி நடைபெற்ற நிலையில் 6 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் கஸ்தூரி அம்மாள் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியைப் பார்வையிட்டுள்ளனர். இரவில் நடைபெற்ற இந்த கட்டட விபத்து கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel