பிளஸ் டூ தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி!

Published On:

| By Balaji

தமிழகத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு (அரியர்) மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று இன்று (ஜூலை 16) காலை திடீரென தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இறுதித் தேர்வை எழுத முடியாத பிளஸ் டூ மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பொதுத் தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் இன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 9.30 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே மாணவர்களின் தேர்ச்சி குறித்த அறிவிப்புகள் இணையத்தளத்தில் வெளியாகின.

**மாணவிகள் அதிக தேர்ச்சி**

அதன்படி 4,24,285 மாணவிகள், 3,55,646 மாணவர்கள் உட்பட மொத்தம் 7,79,931 பேர் இந்த ஆண்டு தேர்வெழுதினர். இதில் 92.3 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.80 சதவிகித பேரும், மாணவர்கள் 89.41 சதவிகிதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் 5.39 சதவிகிதம் அதிகமாகத் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

**பள்ளிகள் வாரியாக**

தமிழகத்தில் மொத்தம் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 127 ஆக உள்ளது. இதில் 100 சதவிகித, தேர்ச்சி அடைந்த பள்ளிகளின் எண்ணிக்கை 2120 ஆகும். அரசுப் பள்ளிகள் 85.94 சதவிகிதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30 சதவிகிதமும், மெட்ரிக் பள்ளிகள் 98.70 சதவிகிதமும், இரு பாலர் பள்ளிகள் 92.72 சதவிகிதமும், பெண்கள் பள்ளிகள் 94.81 சதவிகிதமும், ஆண்கள் பள்ளிகள் 83.91 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளன.

**மாவட்ட வாரியாக**

97.12 சதவிகித தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 96.99சதவிகித தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 96.39சதவிகித தேர்ச்சியுடன் கோவை மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

**பாட வாரியாக**

பாட வாரியான தேர்ச்சி விகிதத்தில், அறிவியலில் 93.64 சதவிகிதம், வணிகவியல் பாடப் பிரிவில் 92.96 சதவிகிதம், கலைப் பிரிவில் 84.65 சதவிகிதம் மற்றும் தொழிற் பாடப்பிரிவில் 79.88 சதவிகித தேர்ச்சியும் உள்ளது. இயற்பியலில் 95.94 சதவிகிதம், வேதியியலில் 95.82 சதவிகிதம், கணிதத்தில் 96.31சதவிகிதம் தாவரவியலில் 93.95 சதவிகிதம், விலங்கியலில் 92.97 சதவிகிதம், உயிரியலில் 96.14சதவிகிதம் கணினி அறிவியலில் 99.51 சதவிகிதம், வணிகவியலில் 95.65 சதவிகித பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

**எப்படி பார்ப்பது**

dge.tn.gov.in , tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியில் பார்த்து மாணவர்கள் தங்களது, பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு முடிவை தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்களுக்கு ரிசல்ட் அனுப்பப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

**கடந்த 5 ஆண்டுகள் தேர்ச்சி விகிதம்**

கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 2016இல் 91.4 சதவிகித தேர்ச்சியும், 2017இல் 92.1 சதவிகித தேர்ச்சியும், 2018இல் 91.1சதவிகித தேர்ச்சியும், 2019இல் 91.3 சதவிகித பேரும் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 92.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share