குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள், பகிர்ந்தவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறி வரும் நிலையில், சென்னையில் 30 பேர் கொண்ட பட்டியல் தயாராக இருப்பதாகக் கூடுதல் ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில் நடைபெற்ற காவலன் ஆப் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி, மாணவர்களுக்குப் பல்வேறு அறிவுரைகளையும் விளக்கங்களையும் வழங்கினார்.
“உலகில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதைத் தடுக்க காவல் துறையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். காவலன் ஆப்பை இதுவரை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் 4 லட்சம் பேர் தங்கள் முழு விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். மற்றவர்கள் முழு விவரம் பதிவு செய்யாதது ஏன் என்று குறித்து ஆராய்ந்ததில் அதில் சிக்கல்கள் இருப்பதாகப் பெண்கள் தெரிவித்தனர். அது விரைவில் சரி செய்யப்படும். எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் ஒரு வாரத்தில் மாற்றம் செய்யப்படும்” என்றார்.
குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பார்த்தவர்களின் 30 பேர் கொண்ட பட்டியல் சென்னை காவல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், மற்ற மாவட்ட காவல் துறைக்கும் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார். “இதுபோன்ற படங்களைப் பார்த்த இரு பெண்கள் காவல் துறையினரிடம் வந்து தெரியாமல் பார்த்துவிட்டதாக, கைது செய்ய வேண்டாம் என மன்னிப்புக் கேட்டு அழுதனர். மன்னிப்பு கேட்டதும் கவலைப்பட வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பிய பிறகு அவர்கள் மகிழ்ச்சியாகச் சென்றனர். தொழில்நுட்பங்கள் பெருகி வரும் நிலையில் அதைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்” என்றார்.
யானையின் பலம் போல் பெண்களின் பலம், யாராவது சீண்டினால் அவர்களை அடிக்கவும் உதைக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. ஏன் தற்காப்புக்காகக் கொலை கூட செய்யலாம், அது குற்றமாகாது என்று கூறி அரங்கத்தை அதிர வைத்தார் ஏடிஜிபி ரவி.
அனைத்து பெண்களுக்கும் அண்ணனாக நான் இருக்கிறேன். உங்கள் சகோதரன் காவல் துறை அதிகாரி எனச் சொல்லுங்கள் என்றவர், “பெண்கள் ஆடை மீது குறை சொல்பவர்கள் தவறானவர்கள். ஆடை என்பது அது அவரவர் சுதந்திரம்” என்றார்.�,