புதுக்கோட்டையில், தனியார் பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததையடுத்து, வாகன ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.
மூன்றாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வழக்கத்தை விட குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. 385 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்த புதுக்கோட்டையில் தற்போது 40 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இன்று வெறும் 15 சதவீத பேருந்துகளே இயக்கப்படுவதால், போக்குவரத்துக்கு வாகனமின்றி மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தனியார் பேருந்துகளை தேடி செல்கின்றனர் பயணிகள். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனியார் பேருந்துகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது.
அதாவது, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்வதற்கு ரூ.37 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.100 முதல் 150 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ் ராஜ் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்குள் வரும் ஒவ்வொரு தனியார் பேருந்தையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து பயணிகளிடமும் நடத்துனர்களிடமும் பயணச் சீட்டை வாங்கி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் நல ஆணையம் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. போராட்டம் தொடருமா, இல்லையா என்பது பேச்சுவார்த்தைக்கு பின்னரே தெரியவரும்.
**வினிதா**
�,