Hதேசவிரோத வழக்கா? பாரதிராஜா

Published On:

| By Balaji

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 கலைஞர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இந்தியாவிலுள்ள திரைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று(செப்டம்பர் 8)இயக்குநர் பாரதிராஜா இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:

”இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசவிரோத குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளதற்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சித்தாலே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது என்று தங்களுடைய கவலையைத் தானே குறிப்பிட்டிருந்தார்கள். இதற்காகத் தேசவிரோத வழக்குப் பதிவு செய்வதை ஏற்கமுடியாது. அரசு சார்பில் பேசியவர்கள், மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

கலைஞர்கள் தங்கள் கருத்துகளைத் திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்யவேண்டும், பொது வெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவதும், பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்களை மவுனமாக்க முயல்வதும் ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கினை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாரதிராஜா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் இது தொடர்பாக கண்டித்தும், வழக்கை திரும்பப் பெற [வலியுறுத்தியும்](https://minnambalam.com/k/2019/10/06/13) கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share