விவசாயிகள் அவதி: அரியலூரில் பருத்தி கொள்முதல் நிலையம் அமையுமா?

Published On:

| By Balaji

அரியலூர் மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கோடை சாகுபடியாகவும், மானாவாரியாகவும் 2,000 ஏக்கர்களுக்கு மேலாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, அதன் அறுவடைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாக அறுவடை செய்யப்பட்ட பருத்திகளை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து அரியலூர் பகுதிகளுக்கு வரும் வணிகர்கள், தற்போது வர முடியாததே இந்த நிலைக்கு காரணம்.

அப்படியே தனியார் வணிகர்கள் வந்தாலும் பருத்தியை குவிண்டால் ஒன்றுக்கு 4,000 ரூபாய்க்கும் குறைவாகவே வாங்கிக் கொள்கிறார்கள். அதே சமயம், அரசு கொள்முதல் நிலையங்களில் ரூ.5,500 வரை விற்பனை செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள் விவசாயிகள்.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை திமுக முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ள தா.பழூர் ஒன்றிய திமுக செயலாளர் கண்ணன், “அரியலூர் மாவட்ட பருத்தி விவசாயிகள், நீண்ட தூரமுள்ள கும்பகோணம், மயிலாடுதுறை, காட்டுமன்னார்குடி உள்ளிட்ட அண்டை மாவட்ட பருத்தி கொள்முதல் நிலையங்களுக்கு மிகுந்த சிரமங்களுக்கிடையே சென்று பல மணி நேரங்களாக காத்திருக்கிறார்கள். ஆனாலும், அடுத்த மாவட்ட விவசாயிகளுக்கு எங்கள் மாவட்டத்தில் அனுமதி இல்லை என்று அரியலூர் மாவட்ட விவசாயிகளின் பருத்திகளை விற்பனை செய்ய அனுமதிக்காமல் அனுப்பிவைப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கொரோனா நோய் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் இந்த நேரத்தில் அரியலூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க, அரியலூர் மாவட்டத்தில் அரசு நேரடி பருத்தி கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share