�
தமிழகம் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தளபதி என்று அவரது ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் விஜய்யின் மெழுகு சிலை கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. குமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே அமைந்திருக்கும் மாயாபுரி மெழுகு அருங்காட்சியகத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட இந்த மெழுகு சிலை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சிறு தாடி-மீசை, அழகிய முடி, வசீகரமான புன்னகையுடன் அச்சு அசலாக விஜய் போன்று தோற்றமளிக்கும் அந்த சிலையை ரசிகர்கள் விரும்பி பார்த்து செல்கின்றனர். ஒரு தடவையேனும் விஜய்யை நேரில் பார்த்து விட முடியாதா என்று ஏங்கி இருக்கும் அவரது தீவிர ரசிகர்கள் அந்த சிலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் போட்டி போடுகின்றனர்.
ஏற்கனவே இந்த மெழுகு அருங்காட்சியகத்தில் ஒபாமா, அன்னை தெரசா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட உலகப்புகழ்பெற்ற இருபது முக்கிய நபர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் சிலை ரசிகர்களை வெகுவாகக்கவர்ந்துள்ளது. பலரும் உயிரோட்டமான இந்த சிலையை ஆர்வமுடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.�,”