தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தமிழக ஆளுநரைச் சந்தித்துக் கொடுத்த மனுவைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல; சட்ட வல்லுநர்கள் வட்டாரத்திலும் விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது.
கடந்த 21ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தனித்தனியே தங்களது கடிதங்களை அவரிடம் கொடுத்தனர்.
அந்தக் கடிதத்தில்… ‘இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய 122 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் ஆதரவு தெரிவித்திருந்தோம். நான் அந்த 122 பேரில் ஒருவர். அன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தந்தேன்.
ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கடந்த 4 மாதங்களாக பல தரப்பினராலும் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் எங்கள் கட்சிக்கு மிகுந்த பாதகம் ஏற்பட்டு வருகிறது. நாங்கள் வைத்த நம்பிக்கைபடி நடக்காமல் எடப்பாடி பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார். இதனால் அவர் மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், ‘எடப்பாடி பழனிசாமி அரசு ஊழல் அரசு’ என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்த ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக, இப்போது ஓ.பன்னீரையே தன்னோடு சேர்த்து அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடு்த்துள்ளார். இதன்மூலம் தமிழக மக்களின் நம்பிக்கையையும், எனது நம்பிக்கையையும் எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டார்.
அதிமுகவால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இதற்குப் பிறகும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க முடியாது, ஊழல் குற்றச்சாட்டுகள் படிந்த அவரை ஆதரிக்க முடியாது என்பதால் தங்களைச் சந்தித்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று 19 எம்.எல்.ஏ-க்களும் தனித்தனியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து அதிமுகவின் சட்டமன்றக் கொறடா ‘தாமரை’ ராஜேந்திரன், (பொருத்தமான பெயர்தான் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்) ‘ஆளுநரைச் சந்தித்த 19 எம்.எல்.ஏ-க்கள் மீதும் நேற்று, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம்’ என்று சபாநாயகருக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்.
இதை சிரமேற்கொண்டு சபாநாயகரும் 19 பேருக்கும் கொறடாவின் பரிந்துரைப்படி ஏன் உங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று விளக்கம் கேட்பு ஆணை அனுப்பியிருக்கிறார்.
இதுபற்றி சட்டம் என்ன சொல்கிறது?
“இந்திய அரசியலமைப்பு சட்டம் 1985-லும், அதன்பின் 2004-லும் கட்சித் தாவல் தடை சட்டம் என்ற ஒரு சட்டம் 10ஆவது அட்டவணையாக அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தால்… கொறடா என்பவர் சட்டமன்றம் குறித்த செயல்பாடுகளுக்காக அதாவது, பேரவை கூடும் சமயங்களில்தான் கட்சி சார்ந்த எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தரவிட முடியும். பேரவை கூடுவது சம்பந்தமாக, தனது கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் உத்தரவிடலாம்.
பேரவை சம்பந்தப்படாத சூழலில், அவர் சார்ந்த கட்சியினர் ஏதேனும் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாகக் கருதினாலும், கொறடாவுக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித அதிகாரமும் இல்லை.
அதேபோல் கொறடா எந்த உத்தரவும் இடாத சமயங்களில் அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சுயமாக செயல்பட்டால், அது கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கருதப்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது
இதன்படி பார்த்தால் தற்போது சட்டமன்றம் கூடவில்லை. அதுபோல எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் கொடுத்த புகாரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். அவர்கள் சட்டமன்றம் கூடும்போது கொறடா உத்தரவை மீறவோ, தனியாக செயல்படவோ இல்லை. ஆக, இதில் கொறடாவின் தலையீட்டுக்கு பங்கே இல்லை.
இத்தனை சட்ட சிக்கல்கள் இருக்கும்பட்சத்தில், சபாநாயகர் முறையாக ஆலோசிக்காமல், எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்பதற்கும்… 10ஆவது அட்டவணைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் அனுமதி இல்லை,
கொறடா கொடுத்த பரிந்துரையும் அதை அடிப்படையாக வைத்து சபாநாயகர் அளித்த நோட்டீஸும் கட்சித் தாவல் தடை சட்டத்துக்கு வெளியே இருக்கிறது.
ஆகவே இந்த அறிவிப்பின் மீது சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் உயர் நீதிமன்றத்தையோ, உச்ச நீதிமன்றத்தையோ அணுகினால்… அங்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்புகள் இந்த 19 எம்.எல்.ஏ-க்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன.
இந்த விவகாரத்தில் இப்போது சட்டமன்றத்துக்கு வெளியே அரசியல் ரீதியான காட்சிகள் நடப்பதால் இது நீதிமன்றத்தின் கேள்வி கேட்கும், விசாரிக்கும் உரிமைக்குட்பட்டதுதான்’’ என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
எனவே, கொறடாவின் பரிந்துரையும், அதை ஒட்டிய சபாநாயகரின் நோட்டீஸும் நீதிமன்றத்துக்குச் சென்றால் நிற்காது என்பதே இந்த அரசியல் களம் சொல்லும் சட்டத்தின் செய்தி.�,