தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் ஆளுநரிடம் புகார் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபாநாயகர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அந்தத் தகுதி நீக்க உத்தரவை நேற்று (அக்டோபர் 25) உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டவருமான சத்தியநாராயணன்.
கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கில் அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி (இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி), நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் இவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தனர். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் முரண்பட்டனர்.
இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பில், “சபாநாயகரின் தீர்ப்பு இறுதியானது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. உட்கட்சிப் பிரச்சினை என்றால் அதைக் கட்சிக்குள் வைத்து பேசித் தீர்த்திருக்க வேண்டும். முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் செல்வது என்பது உட்கட்சிப் பிரச்சினையாக கருத முடியாது. மேலும், அந்த 18 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறினார்களே தவிர, அக்கட்சியிலேயே இன்னொரு நபரைக் குறிப்பிட்டு இவர் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று யாரையும் முன்னிறுத்தவில்லை” என்றெல்லாம் சொல்லி சபாநாயகரின் நடவடிக்கையை நியாயப்படுத்தியிருந்தார்.
அதேநேரம் நீதிபதி எம்.சுந்தர் அளித்த தீர்ப்பில், “18 எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்து மனுகொடுத்த போது அதிமுகவின் இரண்டு அணிகளில் எந்த அணி சட்டப்பூர்வமானது என்பது தீர்மானிக்கப்படாமல் இருந்தது. எனவே, அவர்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டார்கள் எனக் கூற முடியாது” என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி 18 எம்எல்ஏ-க்களுடன் ஆளுநரைச் சந்தித்த இன்னொரு எம்எல்ஏவான ஜக்கையன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அது சபாநாயகர் பாரபட்சமாகவும் இயற்கை நீதிக்கு எதிராகவும் நடந்துகொண்டதைத் தெளிவுபடுத்துகிறது. எனவே, 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று நீதிபதி சுந்தர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த குழப்பத்தால் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட, இதன் பின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், ‘உச்ச நீதிமன்றமே இதை விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பின் நீதிபதிகளைப் பற்றி குறை சொல்லாதீர்கள் என்ற விமர்சனத்தோடு உச்ச நீதிமன்றம் மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணனை நியமித்தது.
இந்தப் பின்னணியில்தான் நீதிபதி சத்தியநாராயணன் கடந்த ஆகஸ்டு மாதம் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை அக்டோபர் 25 ஆம் தேதி வழங்கினார். இதில் இந்திரா பானர்ஜியின் தீர்ப்பை தான் வழிமொழியவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டாலும் அந்தத் தீர்ப்பை ஒட்டியேதான் இந்தத் தீர்ப்பும் அமைந்திருக்கிறது.
475 பக்கம் கொண்ட தீர்ப்பில்,
“இந்த வழக்கில் தகுதி நீக்க உத்தரவு என்பது அரசியலமைப்பின் உச்சபட்ச அதிகாரம் படைத்த சபாநாயகரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பாரபட்சமாகவும், உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டை போதுமான ஆதாரங்களுடன் 18 எம்.எல்.ஏ’க்கள் தரப்பில் நிரூபிக்கவில்லை.
எடியூரப்பா வழக்குடன் இந்த வழக்கை ஒப்பிட முடியாது.. ஆவணங்களை ஆராய்ந்தபோது இந்த வழக்கு முற்றிலும் வேறுபட்டுள்ளது. எனவே 18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை.
அரசியல் சாசன கடமை மீறியதாகவோ, உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாகவோ, இயற்கை நீதியை மீறியதாகவோ கூற முடியாது. 18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சபாநாயகரால் நெறி தவறி பிறப்பிக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது.
முதல்வருக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க் கள் ஆளுநரிடம் மனு அளித்தபோது, இதில் தன்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ளார். ஆனால் இந்தத் தகவலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்கள் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கவில்லை.
ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு(ஓ.பி.எஸ் அணி) சாதகமாகவும் ஒருதலை பட்சமாகவும் சபாநாயகர் செயல்பட்டார் என்பதை ஏற்க முடியாது. தகுதி நீக்க விதிகளையும் இயற்கை நீதியையும் முழுமையாகப் பின்பற்றியே உத்தரவைப் பிறப்பித்துள்ளார்” என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி சத்தியநாராயணன்.
இந்த உத்தரவை அடுத்து 18 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட விதிக்கப்பட்டிருந்த தடையும் தானாகவே நீங்குகிறது, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையும் நீக்கப்படுகிறது.�,