ஹைதராபாத், உன்னாவ், திரிபுரா… தீக்கிரையாகும் பெண்கள்!

public

2012 நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகத் தரவுகள் தெரிவித்தன. ஆனால் தற்போது பெண்கள் மீதான வன்முறை என்பது தினசரி நிகழ்வாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் பெண்கள் மீது மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலை ஊற்றி எரிப்பது என்பது தொடர்கதையாகிவிட்டது.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாகவே உன்னாவில் 23 வயது பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகளால் எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த ரணம் அடங்குவதற்குள், திரிபுராவில் 17 வயது சிறுமிக்கு அதே நிலை ஏற்பட்டுள்ளது

திரிபுராவைச் சேர்ந்த 17 வயது சிறுமி முகநூல் மூலம் அறிமுகமான அஜோய் என்பவரைக் காதலித்துள்ளார். இரு மாதங்களுக்கு முன்பு தீபாவளி சமயத்தில் சிறுமியை அஜோய் சந்தித்து. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி சாந்திர்பஜாரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

இதனிடையே, சிறுமியைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது ரூ.50,000 கொடுத்தால் சிறுமியை விட்டு விடுவதாக அவரது பெற்றோரிடம் அஜோயும், அவரது தாயும் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த வெள்ளியன்று ரூ.17,000 மட்டுமே தர முடியும் அவ்வளவு பணம் தான் இருக்கிறது என்று சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அஜோய் வெள்ளிக்கிழமை மாலை, சிறுமி மீது தீ வைத்து எரித்துள்ளார், இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு ஜிபி பந்த் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அதோடு அஜோய்யை அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

90 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நேற்று உயிரிழந்தார். இவ்விவகாரத்தில் அஜோய்யையும் அவரது தாயையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக எஸ்.பி. (தெற்கு திரிபுரா) ஜல் சிங் மீனா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தாய் கூறுகையில், எங்கள் மகள் காணாமல் போனதுமே காவல்துறையில் புகார் அளித்தோம் ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் பணம் கேட்டு மிரட்டிய போது இரண்டாவது முறையாக காவல் துறையினரின் உதவியை நாடினோம். அப்போதும் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் மகளைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றால் அவர்கள் கேட்ட முழுத் தொகையையும் கொடுக்க வேண்டும் என்றனர். இதனிடையே அவர்களின் முகவரியைக் கண்டுபிடித்து அங்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள்ளாகவே அவள் மீது தீ வைத்து எரித்த தகவல் கிடைத்தது.

உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அவள் ஆபத்தான நிலையிலிருந்தாள். கடந்த இரு மாதங்களாக அவள் அஜோய்யாலும், அவரது நண்பர்களாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிவித்தாள். அவளுக்கு முறையான சாப்பாடு கூட கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அஜோய்யை கைது செய்துள்ள போலீசார் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *