எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 16 இந்திய மீனவர்களைக் கைது செய்துள்ளது பாகிஸ்தான் அரசு.
குஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் நேற்று (அக்டோபர் 21) 2 விசைப்படகுகள் மூலம் சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்தனர் பாகிஸ்தான் கடலோரப் பாதுகாப்புப் படையினர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இந்திய மீனவர்களைக் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகுகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கராச்சி நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து, குஜராத் மாநிலம் போர்பந்தரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய மீனவக் கூட்டமைப்பின் செயலாளர் மணீஷ் லோதாரி கூறுகையில், “சர்வதேசக் கடல் எல்லைக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 16 இந்திய மீனவர்களையும் இரண்டு இந்தியப் படகுகளையும் பாகிஸ்தானியக் கடல் பாதுகாப்பு நிறுவனம் (PMSA) கைப்பற்றியது. இது குறித்து அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் எங்களுக்குத் தகவல் கொடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு படகுகளும் ஒகாவில் பதிவு செய்யப்பட்டவை” என்று தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று, பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தன்று நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக 27 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.�,