தமிழ்நாடு முழுதும் இருந்தும் டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் சென்னைக்கு பணியமர்த்தப்படுகின்றனர். இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நர்ஸுகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அரசின் புள்ளி விவரங்களின்படி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த சென்னையில் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதை நிவர்த்தி செய்வதற்காக சென்னைக்கென்று கூடுதலாக 1,653 மருத்துவர்கள் ஜூன் 10 ஆம் தேதி முதல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும் செவிலியர்கள் எண்ணிக்கையும் சென்னையில் அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவர்கள், நர்ஸுகள், லேப் டெக்னீனிசியன்ஸ், சுகாதாரப் பணியாளர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் சென்னையை நோக்கி வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக டெபுடேஷன் ஆணை அவர்களுக்கு இடப்பட்டுள்ளது. சில மாவட்ட டீன்கள், தங்கள் மாவட்டங்களில் இதனால் சுகாதாரப் பணிகளில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருத்து தெரிவித்தபோதும் சென்னையின் அவசர அவசியம் கருதி, அந்த டீன்கள் வேறு வழியில்லாமல் இதற்கு சம்மதித்ததாக தெரிகிறது.
சென்னைக்காக வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் 3 ஸ்டார் அந்தஸ்துகொண்ட ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நர்ஸுகள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் சென்னையில் பெரிய கல்லூரிகளின் ஹாஸ்டல்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னையில் சில ஹெல்த் இன்ஸ்பெக்டர்களிடம் பேசியபோது, “அனைத்து டாக்டர்கள், நர்ஸுகள், சுகாதாரப் பணியாளர்கள், டெஸ்ட் எடுக்கும் லேப் டெக்னீசியன்கள் ஆகியோருக்கு சென்னையில் 15 நாட்கள் டூட்டி போடப்பட்டுள்ளது. இந்த 15 நாட்களில் சென்னையின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் முழுவதிலும் சோதனை செய்வது, அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை இவர்கள் செய்வார்கள். கிருஷ்ணகிரி உள்ளிட்ட கொரோனா தாக்கம் குறைந்த மாவட்டங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். வேன்களில் வரிசை வரிசையாய் வந்த இவர்களை வழி நடத்த சென்னையின் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” என்று கூறுகிறார்கள்.
**-வேந்தன்**�,