நாமக்கல் மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோயில் திருவிழாவை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் கஸ்தூரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். “எங்கள் பகுதியில் உள்ள பாலி அம்மன் கோயில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அனைத்து சமூகத்தவருக்கும் பொதுவான இந்த கோயிலுக்கு, ஆண்டுக்கொரு முறை அனைத்து சமுதாய மக்களும் இணைந்து திருவிழா நடத்துவது வழக்கம். 2003ஆம் ஆண்டு, இரு பிரிவினரிடையே கோயிலில் சில சடங்குகளைச் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருவிழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு பிரிவினர் தனியாகக் கோயில் ஒன்றை நிறுவி, அங்கு கடந்த 5 ஆண்டுகளாகத் திருவிழா மற்றும் தேரோட்டம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். இந்த திருவிழாவில் மற்ற சமுதாய மக்களை அனுமதிப்பதில்லை. எனவே அனைத்து சமுதாய மக்களுக்கும் சொந்தமான பாலியம்மன் கோயில் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு, துணை மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, மாவட்ட நிர்வாகமும் இந்து அறநிலையத் துறை இணை ஆணையரும் இணைந்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் கூட்டம் நடத்தி திருவிழாவை அமைதியாக நடத்துவது குறித்து 4 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, நவம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை திருவிழா நடத்த முடிவெடுக்கப்பட்டது.
தற்போது, கோயில் திருவிழாவின்போது மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டு போன்ற சடங்குகளுக்காக ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து அறநிலையத் துறை, காவல் துறை தரப்பில் திருவிழாவுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அதிகாரிகள் செயல்படுவது சட்ட விரோதமானது” என்று சிங்காரம் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை இன்று (நவம்பர் 14) விசாரணை செய்தார் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன். அப்போது, சம்பந்தப்பட்ட கோயில் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.�,