15 ஆண்டுகளுக்குப் பிறகு: கேரள-தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தை!

Published On:

| By Balaji

கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையேயான முல்லைப் பெரியாறு, பரம்பிகுளம்-ஆழியாறு நதிநீர்களை பங்கிட்டு கொள்வது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்று (செப்டம்பர் 25) நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் இந்நிகழ்வில், நதிநீர் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை திருவனந்தபுரம் செல்கிறார் முதல்வர். அவருடன் மின் துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கின்றனர். பேச்சுவார்த்தை முடித்த பிறகு இன்று இரவே சென்னை திரும்புகிறார்.

கடைசியாக கடந்த 2004ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இரு மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “இரு மாநில முதல்வர்களின் இந்த பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வரவேற்கிறது. தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் சம்பந்தமான பல்வேறு ஒப்பந்தங்கள் கேரள மாநிலத்துடன் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இதில் அவ்வப்போது சில சர்ச்சைகள் ஏற்பட்டு இருமாநிலங்களுக்கு இடையிலான உறவில் சில பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த சந்திப்பின் மூலம் இருமாநில உறவுகள் பலப்படுத்துவதுடன் நிலுவையிலுள்ள அனைத்து நதிநீர் மற்றும் பாசன பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும்” என்று தெரிவித்துள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் அவர்கள் கேரள முதல்வரை நதிநீர் பங்கீடு சம்பந்தமாக கேரளாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தமிழகத்தின் உரிமை மீட்கப்பட்டு, தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டு, வருங்கால தமிழகம் வளமான தமிழகமாக இருக்க வழி பிறக்கும் என்று நம்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாநில முதல்வர்களும் நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது, இரு மாநில மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share