�
ஒமிக்ரான் தொற்று காரணமாக மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த ஒமிக்ரான் இதுவரை 59 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 17 பேர், ராஜஸ்தானில் 9 பேர், குஜராத்தில் மூன்று பேர், கர்நாடாகாவில் இரண்டு பேர், டெல்லியில் இரண்டு பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகளவிலான பாதிப்பு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் மூன்று பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். மாநகராட்சியில் மேலும் தொற்று பரவுதலைத் தடுக்க இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை காவல் துணை ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “மும்பை காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் டிசம்பர் 11, 12ஆம் தேதிகளில் எந்தவிதமான போராட்டம், பேரணிகள், கூட்டங்கள், வாகன அணிவகுப்பு ஆகியவை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையிலும் அமராவதி, மாலேகான், நானேதேத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கையாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,