இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் புதிதாகக் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க், இந்தியாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் சாதனை நிகழ்த்தியுள்ளதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அறிமுகமான ஒரு ஆண்டுக்குள் 13 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ தனது சேவைக்குள் இணைத்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு முகேஷ் அம்பானி அனுப்பியுள்ள கடிதத்தில், “கடந்த ஒரு வருடத்தில் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நாம் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளோம். இதன் மூலம் இந்தியாவானது தற்காலிக தொழில்நுட்பத்தைப் பெரிதும் பயன்படுத்தாமல் இருந்துவருகிறது என்ற கட்டுக்கதையை நாம் பொய்யாக்கியுள்ளோம். மொபைல் டேட்டா பயன்பாட்டில் 155ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஜியோவின் இந்த வளர்ச்சிக்கு நீங்கள் பெரிதும் பங்காற்றியுள்ளீர்கள். இதனால் தான் நம்மால் 13 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிந்தது. அவர்களுக்கு திருப்திகரமான சேவையையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
உலகிலேயே ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் மட்டுமே ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 100 கோடி ஜி.பி. அளவிலான டேட்டாவை வழங்கி வருகிறது. ஜூன் மாத இறுதி வரையில் ஜியோ நெட்வொர்க் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 12.36 கோடியாக இருந்ததாக டிராய் தகவல் வெளியிட்டிருந்தது. முன்னதாக அக்டோபர் மாதம் வரையில் 11 கோடி வாடிக்கையாளர்களைத் தனது சேவைக்குள் இணைத்த ஜியோ, மாதத்துக்கு 2.9 கோடி வாடிக்கையாளர்களை இணைத்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,