சென்னையில் இதுவரை 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
போரூரில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மையத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் ராமாபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து, அவர்களுக்கு முதல்கட்ட பரிசோதனை செய்யும் மையத்தினை நேற்று(ஏப்ரல் 17) சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ” சென்னையில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருக்கிறது. அதனால், தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 2,500க்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு வாரமும் தலைமைச் செயலர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாளுக்கு நாள் நோய் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால், மாநகராட்சி சார்பில் மாநிலக் கல்லூரியின் விக்டோரியா மாணவர் விடுதி, திருவொற்றியூர், மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரி, அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை, அயனாவரம் அரசுப் பள்ளி, முகப்பேரில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் ராமாபுரம் உள்ளிட்ட 12 இடங்களில் முதல்கட்ட பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிட்ட இடங்களில், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவை எடுக்கப்படும். பின்னர் மருத்துவர் பரிசோதித்து, அவரை வீட்டிலேயே தனிமையில் இருக்க அனுமதிப்பதா, அல்லது கொரோனா சிகிச்சை மையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்வர். வருகின்ற காலங்களில் தொற்று அதிகரித்தால் இதுபோன்ற முதற்கட்ட பரிசோதனை மையங்களை அதிகரிக்கவும் மாநகராட்சி தயாராக உள்ளது.
கடந்த ஆண்டு தொற்று குறைந்ததற்கு, பரிசோதனைகளை அதிகரித்ததும் ஒரு காரணம். அதனால் தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம் பரிசோதனைகள் என்பதை 25 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எட்டு லட்சம் பேருக்கு கோவிஷீல்டும், 4லட்சம் பேருக்கு கோவேக்சினும் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு இரண்டு என 400 காய்ச்சல் முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
**வினிதா**
�,