பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது!

Published On:

| By Balaji

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கி மார்ச் 24ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இன்று (மார்ச் 2) மொழிப்பாடத்துக்கான (தமிழ்) தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

2019-20ஆம் கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 8,16,359 மாணவ-மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் 19,166 தனித்தேர்வர்கள், 2 திருநங்கைகள், 63 சிறைக் கைதிகளும் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தில் மொத்தம் 600 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டு, 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு மதியம் 1.15 வரை நடைபெறவுள்ளது. அதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாள் வாசிக்கவும், அடுத்த 5 நிமிடங்கள் நுழைவுச் சீட்டு மற்றும் சுய விவரங்களைச் சரிபார்க்கவும் ஒதுக்கப்படுகிறது. அதன்பின் 10.15 முதல் 1.15 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுதலாம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளது .

இந்தத் தேர்வுக்காக சுமார் 41,500 பேர் தேர்வறைக் கண்காணிப்பாளராக ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்வு மையங்களைப் பார்வையிடுவதற்காக 4,000 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படையினர் மாணவிகளைச் சோதனை செய்ய தேர்வுத் துறை நிபந்தனைகளை விதித்துள்ளது. மாணவிகளைப் பெண் ஆசிரியர்கள் மட்டுமே சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது.

அதுபோன்று தேர்வு அறைகளில் முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்வுத் துறை விதித்துள்ளது. செல்போன் உள்ளிட்ட மின்சாதன பொருள்களை கொண்டுவரத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள தேர்வுத்துறை, தேர்வின்போது ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகப் பள்ளி நிர்வாகம் செயல்பட்டால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோன்று மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆள் மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பொதுத் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். காப்பியடித்தல் விடைத்தாளை மாற்றி எழுதுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்குத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share