உலகில் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஒன்று, எவரெஸ்ட். இமயமலையில் உள்ள ‘மகாலங்கூர் இமால்’ மலைத்தொடரில் இது அமைந்துள்ளது. இது பூமியின் மையப்பகுதியில் இருந்து அளந்தால், ஐந்தாவது பெரிய மலையாகும். இந்த மலையில் இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, அன்ஷு ஜம்சென்பா என்னும் பெண், தொடர்ச்சியாக முயற்சி செய்து 118 மணி நேரத்தில், எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டுமுறை ஏறி சாதனை படைத்திருக்கிறார். அதாவது ஐந்து நாட்களுக்குள், இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதன்மூலம் இதற்கு முன், கடந்த 2012ஆம் ஆண்டு, நேபாளத்தைச் சேர்ந்த சுஹிரிம் செர்பா, இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய, கின்னஸ் உலக சாதனைப்பெற்றதை, அன்ஷு முறியடித்துள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அன்ஷு ஜம்சென்பாவுக்கு வயது 37. மலையேறுவதில் அளவில்லாத ஆர்வம் உடையவர்.
‘சுமார் 8,848 மீட்டர் (29,028 அடி) உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை, அன்ஷு மே-21ஆம் தேதி, நேற்று காலை 8 மணிக்குள் இரண்டுமுறை ஏறி சாதனை படைத்திருக்கிறார். பின், அங்கு இந்திய மூவர்ணக்கொடியை நட்டுவைத்தார்’ என ட்ரீம் ஹிமாலாயா அட்வெஞ்சர் நிறுவனத்தின் டாவா லாமா தெரிவித்தார்.
மேலும் அன்ஷு ஜம்சென்பா இதற்கு முன்புவரை, எவரெஸ்டில் ஐந்து முறை ஏறியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு, 10 நாள்களில் இரண்டுமுறை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தை அடைந்தார் அன்ஷு. 2014ஆம் வருடம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற போது, பனிச்சரிவால் 16 சுற்றுலா வழிகாட்டிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், அவரின் தொடர் முயற்சிகள் தடைபட்டன. மேலும் இவரின் தொடர் முயற்சிகளின் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஐந்து நாள்களுக்குள் இரண்டு முறை எவரெஸ்டின் 17,500 அடி உச்சத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
தற்போது அன்ஷு ஜம்சென்பா நிகழ்த்திய சாதனைக்கு அருணாச்சலப்பிரதேச முதல்வர் பெமா காந்து, பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 118 மணிநேரத்தில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த, அன்ஷுவுக்கு உலகம் முழுவதும் இருந்தும் பாரட்டுக்கள் குவிகின்றன.�,