10ஆம் வகுப்புத் தனித்தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு!

Published On:

| By Balaji

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அரையாண்டு காலாண்டு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டது.   பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், தனித்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, தேர்வு நடத்திய விதம் குறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நாளை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறவுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel