வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான துஷார் இம்ரான், 11 ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்க மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
`வங்கதேச ஏ’ கிரிக்கெட் அணி `இலங்கை ஏ’ அணிக்கு எதிராக மூன்று முதல்தர டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. ஜூன் 26 முதல் தொடங்கும் இந்த நான்கு நாள் டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியில் 34 வயதான துஷார் இம்ரான் இடம்பிடித்துள்ளார். வங்கதேச அணி சார்பில் முதல்தர போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் இவர் மட்டும் தான்.
2002ஆம் ஆண்டு முதன் முறையாகச் சர்வதேச போட்டிகளில் காலடி எடுத்து வைத்த இவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 டெஸ்ட் மற்றும் 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் தற்போது 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் வங்கதேச அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
இவரது தேர்வு குறித்து வங்கதேச தேர்வுக்குழுவின் தலைமை அதிகாரி மின்ஹாஜூல் அபிதின் கூறுகையில், “துஷார் இம்ரான் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் சர்வதேச அணிகளை எவ்வாறு எதிர்கொள்வார் என்பதை அறிந்து கொள்ள தற்போது அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. `இலங்கை ஏ’ தொடரில் அவர் எப்படி விளையாடுவார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்காத ஷபிர் ரகுமான், மொசட்டாக் ஹுசைன் ஆகியோரும் `வங்கதேச ஏ’ அணியில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுடன் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இருந்து சுழற்பந்துவீச்சாளர் ரிஷாத் அஹமதும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.�,”