O10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜூன் 15ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்தப் பள்ளிக் கல்வித் துறை தீவிர முயற்சி எடுத்த நிலையில், கொரோனா வேகமாகப் பரவும் நேரத்தில் தேர்வு நடத்துவது மாணவர்களின் நலனுக்கு ஆபத்தானது என்று எதிர்ப்புகள் எழுந்தன.
இதனையடுத்து, 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முகாம் அலுவலர்களுக்கு தேர்வுத் துறை இயக்குனர் பழனிசாமி நேற்று (ஜூலை 4) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “10ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ‘ஆப்சென்ட்’ என பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
எத்தனை மதிப்பெண் எடுத்து இருந்தாலும், குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி என, ஏற்கனவே தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்தார். இந்த நிலையில் ஆப்சென்ட் போட வேண்டுமென தெரிவித்துள்ளது ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
**எழில்**�,