37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருந்தால் மட்டுமே தேர்வுக்கு அனுமதி!

Published On:

| By Balaji

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த முக்கிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காலத்தில் மாணவர்களின் நலன் கருதி பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், கட்டாயம் தேர்வு நடைபெறும் என்று கூறி பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது, அதன்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் ஜூன் 15ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

தேர்வு நடைபெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், ஜூலை மத்தியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பொதுத் தேர்வு குறித்து நேற்று மாலை முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், “பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அவ்வாறு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத் தேர்வில் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம்.

37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருந்தால் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். சிறப்புப் பேருந்தில் 60 சதவிகித மாணவர்கள் மட்டும் ஏற அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share