102 வயதில் உயிரிழந்த இந்தியாவின் முதல் ‘மிஸ்டர் யூனிவெர்ஸ்’!
இந்தச் செய்தியை படிப்பதற்கு முன்பே மனோஹர் எய்ச் பற்றி தெரிந்தவராக இருந்தால் உங்களுக்கு வாழ்த்துகள். 1952-ல், அதாவது இந்தியா சுதந்திரம் பெற்ற 5 வருடத்தில் மிஸ்டர் யூனிவெர்ஸ் என்ற பட்டத்தை வென்று இந்தியாவை உலக ஆணழகன் போட்டியில் பெருமைப்படுத்தியவர் மனோஹர் எய்ச். 4 அடி 11 அங்குல உயரத்தில் இருக்கும் இவருக்கு ‘பாக்கெட் ஹெர்குலஸ்’ என்ற பெயரும் உண்டு. ஜிம் மற்றும் ஃபிட்னஸ் கிளப்புகள் இல்லாத காலத்தில் மனோஹர் எய்ச் புஷ்-அப், புல்-அப், காலை உயர்த்துதல் ஆகியவற்றால் மட்டுமே கட்டுக்கோப்பான உடலை பராமரித்து வந்தார். அந்தச் சமயத்தில் ராயல் ஏர் ஃபோர்ஸில் சேர்ந்தார். அங்குதான் இந்தியாவின் முதல் மிஸ்டர் யூனிவெர்ஸ் உருவானார். 1951-ல் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இவர், 1952-ல் மிஸ்டர் யூனிவெர்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 1955-ல் மூன்றாவதாகவும், 1960-ல் நான்காவதாகவும் வந்தார். இதைத் தவிர ஆசிய போட்டிகளில் கலந்துகொண்டு முறையே 1951, 1954, 1958-களில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றார். 90 வயது வரையிலும் பல போட்டிகளில் இவர் பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பல பாடி பில்டர்களுக்கு இவர் இன்ஸ்பிரேஷனாக இருந்து வந்தார். புகை, மது என எந்த பழக்கமும் இல்லாமல் கடைசிவரை சிறந்த வீரராக திகழ்ந்தவர் மனோஹர் எய்ச் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 15 நாட்களாக நீர் ஆகாரம் மட்டுமே உட்கொண்டு படுத்த படுக்கையாக கிடந்த மிஸ்டர் யூனிவெர்ஸ் நேற்று 3.50-க்கு தனது கடைசி மூச்சை சுவாசித்திருக்கிறார். கடைசி வரை தனது உடற்பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்த எய்ச், ‘ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும்தான் அதிகநாள் உயிரோடு வாழ ஒரே வழி’ என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்.�,