“100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சீர்காழியில் நடந்த பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று (மார்ச் 30) சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். கடந்த நாட்களில் பிரதமர் மோடியை அதிகமாக புகழ்ந்து வாக்கு சேகரித்துவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா பகுதிகள் என்பதால் மக்களை கவர்வதற்காக விவசாயத் திட்டங்கள் குறித்துப் பேசினார்.
சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நாம் ஒவ்வொரு முறையும் கர்நாடகத்தை நம்பியே விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இது மிகப்பெரிய திட்டம். இது நிறைவேற்றப்பட்டால் தண்ணீருக்காக நாம் அல்லல்பட வேண்டிய நிலை இருக்காது.
பருவ மழை பெய்யாத காலங்களில் நமக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகம் மறுக்கிறது. கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தால் தண்ணீரை ஒவ்வொரு முறையும் கெஞ்சிக் கெஞ்சிப் பெற வேண்டிய நிலை மாறும்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சீர்காழியில் மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் ஆசைமணிக்கு வாக்கு சேகரித்துப் பேசிய அவர், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பணிக் காலம் ஆண்டுக்கு 100 நாட்கள் என்பதிலிருந்து 200 நாட்களாக உயர்த்தப்படும்” என்று வாக்குறுதி அளித்தார்.�,