கொரோனா அதிகரித்தபோது பயணிகள் வருகை குறைந்ததால் ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் நாளை முதல் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின்போதும் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால், ரயில்களில் பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனால், பல சிறப்பு ரயில்கள் மே மாத தொடக்கம் முதல் ரத்து செய்யப்பட்டன.
தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 8 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் 50 சதவிகிதம் பேருந்துகளை இயக்கவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நாளை (ஜூன் 20) முதல், முதற்கட்டமாக, 10 சிறப்பு ரயில்களை இரு வழிகளிலும் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து, தஞ்சாவூர், கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, கோயம்புத்தூர், ஆலப்புழா, மேட்டுப்பாளையம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,