பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு முன்னதாக மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் சந்திக்கும் முதல் பொதுத் தேர்வு பத்தாம் வகுப்புத் தேர்வாகும். இதனை எதிர்கொள்ளும் வகையில் பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும், பல்வேறு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். அதோடு ஆசிரியர்களால் பாடங்கள் ரிவிசன் செய்யப்படும். இது பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு எளிதாக அமையும்.
ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். தேர்வு எழுதும் வகையில் மனதளவில் அவர்கள் தயாராகவில்லை. அதோடு முன்மாதிரி தேர்வுகள் எழுதாமல் ஒரு தொடர்ச்சியே இல்லாமல் தேர்வு எழுதினால் அது மாணவர்களுக்குச் சிரமமாக இருக்கும். எனவே மீண்டும் தேர்வர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், பொதுத் தேர்வு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்புத் தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரி ஈரோடு மாவட்டம் கொங்கடை எனும் மலைக் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி மீனாவின் தந்தை மாரசாமி பூசாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளிப்பாளையத்தில் எனது மகள் படித்து வருகிறார். விடுதியில் தங்கிப் படித்து வந்த அவர், ஊரடங்கால் அவசரமாக வீடு திரும்பியதால் பாடப்புத்தகங்கள் எதுவும் எடுத்து வரவில்லை. இதனால் தேர்வுக்குத் தயாராவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது, அதோடு தேர்வுக்குச் செல்லவும் பேருந்து வசதி இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுபோன்று கடலூரைச் சேர்ந்த இளங்கீரன் என்பவரும் தேர்வைத் தள்ளி வைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மாணவியின் தந்தை சார்பில் தங்கள் மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முறையிடப்பட்டது. கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும் வசிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்திய பிறகே தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து இந்த மனுவையும் விசாரணைக்குப் பட்டியலிடும் படி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
**கவிபிரியா**�,