நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு மாற்றம்!

Published On:

| By admin

பத்தாம், பனிரெண்டாம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதிவரை முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 வரை இரண்டாவது திருப்புதல் தேர்வும் நடைபெறும்.

அதுபோன்று, 12 ஆம் வகுப்புக்கு பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 16 வரை முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் 28 முதல் ஏப்ரல் 5 வரை இரண்டாம் திருப்புதல் தேர்வும் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.

பள்ளி கல்வித்துறை நடத்தும் திருப்புதல் தேர்வுக்கு, முதல் முறையாக, அரசு தேர்வு துறை வழியே, மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படவுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் எப்படி நடத்தப்படுமோ, அதுபோன்று அனைத்து கட்டுப்பாடுகளுடன், திருப்புதல் தேர்வு நடத்தப்பட வேண்டும். விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யக்கூடாது. முதன்மை கல்வி அலுவலக அறிவுறுத்தல்படி, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதால், அன்று நடைபெறவிருந்த 10, 12ஆ ம் வகுப்பு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்வுத்தேதி மாற்றம் குறித்த விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share