�
பிளாஸ்டிக் ஒழிப்பின் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் குண்டக்கல்லில் ஒரு கிலோ பிளாஸ்டிக் அளிப்போருக்கு இரண்டு கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள குண்டக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக அந்த மாவட்ட கலெக்டர் சத்யநாராயணா வியாபாரிகள் உதவியுடன் புதிய திட்டம் வகுத்தார். அதன்படி ஒரு கிலோ பழைய பிளாஸ்டிக் அளிப்போருக்கு இரண்டு கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்தார்.
நேற்று முன்தினம் (அக்டோபர் 26) நடந்த இதற்கான தொடக்க விழாவில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்று பழைய பிளாஸ்டிக் பொருட்களை அளித்து அரிசி பெற்று சென்றனர். இது குறித்து, கலெக்டர் சத்யநாராயணா, “பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முதன்முறையாக அரிசி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடைய நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, அரிசி வியாபாரிகள் சிறந்த ஒத்துழைப்பு வழங்கினர்” என்று கூறினார்.
�,