1கிச்சன் கீர்த்தனா

Published On:

| By Balaji

போகி பண்டிகையை முன்னிட்டு வேண்டாத பொருள்களோடு வேண்டாத எண்ணங்களையும் சேர்த்து பொசுக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பொன்னான நாளில், இயந்திரமாக ஓடிக்கொண்டிருந்தவர்களும் இனிதே ஆயத்தமாகிவிட்டனர் பொங்கல் பண்டிகைக்காக.

முதல் நாளே மார்கழி கோலம் போட்டு மறுநாள் செல்ஃபி எடுப்பதையெல்லாம் செய்ய முடியாது இந்தப் பொங்கல் நாளில். நாளை தான் பொங்கல் பொங்கிட முடியும் என்பது நாம் அறிந்த ஒன்றே. இருந்தாலும் திடீரென யாரேனும் வந்தாலோ அல்லது நாளை நாம் சந்திக்க நேரம் மாறினோலோ என்னாவது என யோசித்தே, இன்றைய மெனுவாக வருகிறது அவல் பொங்கல்.

**தேவையான பொருள்கள்:**

அவல் – ஒரு கப்

பச்சைப்பயறு – கால் கப்

வெல்லம் – ஒரு கப்

குங்குமப்பூ – சிறிதளவு

பால் – அரை கப்

ஏலக்காய் – 1

நெய் – கால் கப்

முந்திரி – 10

திராட்சை – 10

*செய்முறை:*

பச்சைப்பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ளவும்.

பச்சைப்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவுக்குத் தண்ணீர் விட்டு மலர வேகவைக்கவும்.

பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கொதிவந்ததும் அவலைக் கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவான தீயில் மூடி வேகவைக்கவும். அவல் சீக்கிரமே வெந்துவிடும்.

சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்கலில் சேர்த்துவிடவும்.

இதற்கிடையில் அடிகனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர்விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

ஒரு வாணலில் நெய்விட்டு முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும்.

**கீர்த்தனா வாழ்த்து:**

பழையன கழிதலும்

புதியன புகுதலும்

போகி அன்று என்பதை

தவறாகக்கொண்டு,

பழையவை தீயிட்டு ,

ரப்பர் உருளை நெருப்பிட்டு

மாசுபடுத்தும் மானிடரே!

வந்துவிடுமே பேரிடர்

அறிவீரோ!

மாசுபட்ட வானம்

கோபம்கொண்டு

கொடுமைகளைத் தருமே

தாங்கமுடியுமா?

பழையனவாம் குரோதம், வெறுப்பை களைந்து

புதியனவாம் அன்பு பாசம் நேசம்

வளர்ப்போம்

வளர்வோம்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel